தினமும் காலையில் பாக்கெட் பால் ஆர்டர் செய்வதிலிருந்து, திடீரெனக் குறையும் விமானக் கட்டணத்தைப் சரியாகப் பிடித்து டிக்கெட் வாங்கும் வரை: திரும்பத் திரும்ப இணையத்தில் தேடுவதும், நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய பணப்பரிவர்த்தனைக்கும் 4 அல்லது 6 இலக்க MPIN-ஐ டைப் செய்வதும் அலுத்துப்போய்விட்டதா?
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) இதற்கு ஒரு புரட்சிகரமான தீர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் Unified Agent Protocol (UAP). இதுவரை நாம் கைமுறையாக MPIN போட்டுச் செய்து வந்த UPI பரிவர்த்தனைகளை, இனி உங்களுடைய பிரத்யேக AI ஏஜென்ட்டுகள் பாதுகாப்பாகவும் தன்னாட்சியுடனும் (Autonomous) செய்து முடிக்கும். அவை UAP தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.
UAP தொழில்நுட்பம், வெவ்வேறு தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி எளிமையாக்கப் போகிறது என்பதைச் சில எளிய நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.
1. இல்லத்தரசிகள் மற்றும் பிஸியான வேலை ஆட்களுக்கு: தானாக இயங்கும் வீட்டு உபயோகச் சேவைகள்
பிரச்சனை: தினமும் பால், ரொட்டி அல்லது காய்கறிகள் தீர்ந்துவிட்டதா எனச் சரிபார்த்து, ஆப் (App) மூலம் ஆர்டர் செய்து, MPIN போட்டுப் பணம் செலுத்துவது ஒரு தொடர்ச்சியான தலைவலி.
UAP தரும் மாற்றம்: நீங்கள் உங்கள் மொபைலில் உள்ள AI ஏஜென்ட்டிடம் எளிய தமிழில் பின்வருமாறு கட்டளையிட்டால் போதும்: "எனது ஃபிரிட்ஜில் தினமும் பாலும் ரொட்டியும் இருக்குமாறு பார்த்துக்கொள். ஒரு நாளைக்கு ₹200-க்கு மிகாமலும், மாதத்திற்கு ₹3,000-க்கு மிகாமலும் Quick-Commerce ஆப் மூலம் ஆர்டர் செய்து பணம் செலுத்திவிடு".
"அப்படியே ஹுஜூர்" என்று அடுத்த கட்டளை வரும் வரை தினமும் பாலும் ரொட்டியும் ஆர்டர் செய்து விடும். ஆனால் என்ன? பொருளை நீங்கள்தான் தினமும் வாங்கி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
இது எப்படி இயங்குகிறது?: UPI Circle மற்றும் Reserve Pay வசதியைப் பயன்படுத்தி, இந்த AI ஏஜென்ட் உங்களுக்கான பண வரம்பிற்குள் (Budget Limit) தினமும் காலையில் தானாகவே ஆர்டர் செய்து பணத்தைச் செலுத்திவிடும். நீங்கள் PIN டைப் செய்யவே தேவையில்லை!
2. முதியோர்கள்: பயமில்லாத, குரல் வழி பாதுகாப்புடன் கட்டணங்கள் செலுத்துதல்
பிரச்சனை: முதியவர்கள் அல்லது தொடுதிரை போன்களைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், ஆப் சிக்கல்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் காரணமாக மின்சாரக் கட்டணம் அல்லது மொபைல் ரீசார்ஜ் செய்ய மூன்றாம் மனிதர் உதவியை பயத்துடன் நாட வேண்டியுள்ளது.
UAP தரும் மாற்றம்: வீட்டில் இருக்கும் வயதான பெற்றோர், குரல் வழியிலேயே கட்டளையிடலாம்: "என் மின்சாரக் கட்டணம் வந்ததும் தொகையைச் சொல். ₹800-க்குள் இருந்தால் நீயே செலுத்திவிடு. அதற்கு மேல் இருந்தால் என்னிடம் கேள்."
இது எப்படி இயங்குகிறது?: AI ஏஜென்ட் அவர்களின் தாய்மொழியிலேயே (தமிழ்) பேசி, வரம்பிற்குள் இருக்கும் கட்டணங்களைத் தானாகப் செலுத்தும். கட்டணம் ₹800-க்கு மேல் அதிகமாய் வரும் பட்சத்தில், "இந்த மாதம் மின்சாரக் கட்டணம் ₹1,200 வந்துள்ளது, செலுத்தட்டுமா?" என்று குரல் வழியே அனுமதி கேட்டு மட்டுமே பணத்தை அனுப்பும்.
3. அண்ணாச்சி கடைகள் & சிறு வணிகர்கள்: தானாக இயங்கும் சரக்கு ஆர்டர்கள்
பிரச்சனை: கடைக்காரர்கள் மொத்த வியாபாரிகளின் விலைப் பட்டியலை தினமும் சரிபார்த்து, ஃபோன் செய்து ஆர்டர் கொடுத்து, பணம் அனுப்புவதற்குள் பெரும் நேரம் வீணாகிறது.
UAP தரும் மாற்றம்: கடையின் AI ஏஜென்ட்டிடம்: "வேகமாக விற்கும் நான் சொல்லும் பொருட்களின் இருப்பு குறைந்தால், எந்த மொத்த வியாபாரி குறைந்த விலைக்குத் தருகிறாரோ அவரிடம் ஆர்டர் கொடுத்துப் பணத்தை அனுப்பிவிடு."
இது எப்படி இயங்குகிறது?: கடைசியாக இருக்கும் சரக்கு இருப்பைக் கணக்கிட்டு, குறைந்த விலையைக் கண்டறிந்து, UAP மூலம் தொகையைச் செலுத்தி, பொருட்கள் கடையை வந்தடையும் நேரத்தையும் வாட்ஸ்அப்பில் கடைக்காரருக்கு இந்த AI ஏஜென்ட் அனுப்பிவிடும்.
4. முதலீட்டாளர்கள்: சந்தை வீழ்ச்சியில் தானியங்கி முதலீடு
பிரச்சனை: பங்குச்சந்தை திடீரென வீழ்ச்சியடையும் போது (Dip), குறைந்த விலையில் மியூச்சுவல் ஃபண்ட் வாங்க நினைத்தாலும், வேலை நேரங்களில் சந்தையைக் கவனிக்க முடியாமல் அந்த வாய்ப்பைத் தவறவிடுவது உண்டு.
UAP தரும் மாற்றம்: "நிஃப்டி (NIFTY) குறியீடு முந்தைய நாளை விட 1.5% குறைந்தால், என் ஃபண்டில் ₹5,000 முதலீடு செய். மாதத்திற்கு ₹15,000-க்கு மேல் முதலீடு செய்யாதே." என்று கட்டளையிடலாம்.
இது எப்படி இயங்குகிறது?: AI ஏஜென்ட் நேரலை சந்தையைக் கண்காணித்து, சந்தை 1.5% சரியும் அந்தச் சரியான நிமிடத்தில், pre-blocked நிதியிலிருந்து ₹5,000-ஐ தானாகவே மியூச்சுவல் ஃபண்டிற்குச் செலுத்திவிடும்.
எதிர்கால டிஜிட்டல் பரிவர்த்தனையின் புதிய பாதை
UAP என்பது வெறும் பணப்பரிவர்த்தனை முறை மட்டுமல்ல; அது உங்களின் தனிப்பட்ட (உங்களால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட) நிதி உதவியாளராக (Financial Assistant) இயங்கும் ஒரு நுட்பம். நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை எப்போதும் மீறாது. தேவையான பொது உங்கள் அனுமதியை கேட்டு வாங்கி செயல்படும்.
NPCI அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் இத்தொழில்நுட்பம், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இறுதி ஒப்புதலுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது. UAP நடைமுறைக்கு வரும்போது, ஒவ்வொரு முறை பொருள்களை வாங்கும்போதும் MPIN டைப் செய்யும் பழக்கம் வரலாறாக மாறப்போவது உறுதி! கட்டை ஃபோன் உபயோகித்து இந்த சேவையை பெற இயலாது. ஸ்மார்ட் ஃபோன் (தொடுதிரை ஃபோன்) தேவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக