வியாழன், செப்டம்பர் 24, 2026

AI யானையும் 5 குருடர்களும்: உலக ஊடகங்களின் நவீன 'AI' மாயை!

நம்மில் பலருக்கும் 'ஐந்து குருடர்களும் ஒரு யானையும்' என்ற கதை தெரிந்திருக்கும்.



யானையை ஒருபோதும் பார்த்திராத ஐந்து குருடர்கள், ஒரு யானையைத் தொட்டுப் பார்த்து அது எப்படிப்பட்டது என்று விவரிக்க முயல்கிறார்கள்.

  • யானையின் காதைத் தொட்டவர், "யானை என்பது ஒரு விசிறி போல இருக்கும்" என்றார்.
  • அதன் காலைத் தொட்டவர், "இல்லை, அது ஒரு பெரிய தூண் போல இருக்கும்" என்றார்.
  • கூர்மையான அதன் தந்தத்தைத் தொட்டவர், "யானை என்பது ஒரு கூர்மையான ஈட்டி" என்றார்.
  • அதன் வாலைப் பிடித்தவர், "யானை என்பது ஒரு கயிறு" என்றார்.
  • அதன் வயிற்றுப் பகுதியைத் தொட்டவர், "யானை என்பது ஒரு பெரிய சுவர்" என்றார்.
  • அவர்கள் ஒவ்வொருவரும் தொட்ட பகுதி மட்டுமே அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால், அவர்கள் யாரும் ஒட்டுமொத்த யானையைக் காணவில்லை!

இன்றைக்குக் உலகெங்கிலும் உள்ள பிரபல நாளிதழ்களிலும் (Popular Newspapers), சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் "செயற்கை நுண்ணறிவு" (Artificial Intelligence) பற்றி எழுதப்படும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பார்க்கும்போது, இந்தக் கதைதான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. AI எனும் பிரம்மாண்ட யானையைச் சுற்றி நிற்கும் நவீன 'குருடர்களாகவே' பல எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் மாறியிருக்கிறார்கள்!

ஊடக தாகமும் ஆரவக்கோளாறு எழுத்தாளர்களின் படையெடுப்பும்

இன்றைக்கு ஊடகங்களுக்கு AI பற்றிய கட்டுரைகள் மீது மிகப்பெரிய தாகம் (Craving) இருக்கிறது. வாசகர்களின் கவனத்தைக் கவர என்ன தலைப்பு போட்டாவது கட்டுரைகளை வெளியிடத் துடிக்கிறார்கள். எழுத்தாளர்களோ, அந்தத் தாகத்திற்குத் தீனி போடுவதற்காகத் தொழில்நுட்பத்தின் அடிப்படை கூடத் தெரியாமல் எதையாவது எழுதித் தள்ளுகிறார்கள்.

AI பற்றி எழுதப்படும் கட்டுரைகளை உற்று நோக்கினால், அதில் பலதரப்பட்ட எழுத்து வடிவங்களை நாம் அடையாளம் காண இயலும்:

1. "கடவுளும் AI-யும்" - ஆன்மீக/அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் (The Mythmakers)

சில எழுத்தாளர்களுக்கு AI பின்னணியில் இருக்கும் கணக்கியல் அல்லது தொழில்நுட்பச் சக்கரங்கள் எப்படிச் இயங்குகின்றன என்பதே உண்மையில் தெரியாது. "If Anyone Builds it, Everyone Dies" என்ற புத்தகத்தில், GenAI எப்படி இயங்குகிறது என்று ஒரு அத்தியாயத்தில் சரியாக விவரித்துள்ளார்கள். ஆனால் ஐயகோ(!) இன்னொரு அத்தியாயத்தில் AI-ஐக் கடவுளுக்கு இணையான சக்தியாகச் சித்தரிக்கிறார்கள். "கடவுள் மனிதனைப் படைத்தார்; மனிதன் உலகைக் கட்டுப்படுத்துகிறான். அப்படியென்றால் மனிதன் AI-க்கு புத்தி கொடுத்தால் அது (ஏஐ) மனிதனை அழித்துவிடாதா?" என்பது போன்ற விசித்திரமான தர்க்கங்களை வைக்கிறார்கள். அதே போல "ஏஐ மனிதனால் உருவாக்கப் படுவதில்லை, மாறாக வளர்க்கப் படுகிறது. அதனால் ஒரு கட்டத்தில் அது கட்டுக்கடங்காமல் வளரும் சாத்தியங்கள் அதிகம் என்பதை எப்படி மறுப்பீர்கள்" என்ற தர்க்கத்தை முன்வைக்கிறார்கள்.

மேலும், இவர்கள் தங்கள் கட்டுரைகளில் வார்த்தைகளை மிகச் சாமர்த்தியமாகக் கையாளுகிறார்கள். உதாரணமாக, ஒரு கணினி மாடல் தரவுகளை வைத்து முடிவு எடுப்பதை "Inference" (கணிப்பு) என்று எழுதுவதற்கு பதிலாக,  "Thoughts" (சிந்தனைகள்) என்று எழுதுகிறார்கள். இதன் மூலம் இயந்திரம் ஏதோ சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டது போன்ற போலிப் பிம்பத்தை விளைவுக்காக (rhetoric) உருவாக்க முயல்கிறார்கள்.

2. ஊகங்களின் அடிப்படையில் கோட்டை கட்டுபவர்கள் (The Conjectural Theorists)

இன்னொரு வகை எழுத்தாளர்கள், எந்தவிதத் தரவுகளும் இன்றி வெறும் ஊகங்களை (Conjectural arguments) மட்டுமே தங்களின் முழு முதலீடாகக் கொண்டு கட்டுரைகளை அடுக்குகிறார்கள்.

"AI தன் டேட்டா சென்டரில் இருந்து ஒயர்களைக் கழற்றிக்கொண்டு காடுகளுக்குள் ஓடி ஒளியும் மனிதர்களை வேட்டையாடும்" என்றும்,

"அது சுயமாக அடுத்த தலைமுறை மென்பொருள் மற்றும் சிலிகான் சில்லுகளைத் தயாரித்துத் தன்னைத்தானே மேம்படுத்திக் (upgrade) கொள்ளும்" என்றும் கதை அளக்கிறார்கள்.

ஆனால், ஒரு 2nm சிப்பை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் TSMC தொழிற்சாலை, ASML இயந்திரங்கள், உலகளாவிய சப்ளை செயின் (Supply Chain) எனப் பிரம்மாண்ட மனித உழைப்பு தேவை என்பதை இவர்கள் உணர்வதே இல்லை.

தமிழில் "ஊமையனுக்கு உளறுபடியான் சண்டப்பிரசண்டன்" என்று பழமொழி சொல்லுவார்கள். ஏறக்குறைய அதுபோலத்தான் நடக்கிறது.  

3. யதார்த்தத்தை மட்டுமே பேசும் சான்றோர்கள் (The Grounded Experts)

திருவள்ளுவர் 'சான்றோர்' என்பவர்கள் யார் என்பதற்குத் தெளிவான இலக்கணம் வகுத்துள்ளார்:

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் ஊன்றிய தூண்." (குறள்: 983)

(பொருள்: அன்பு, பழிக்கு நாணுதல், உலக நடைமுறை அறிந்து உதவுதல், இரக்கம், வாய்மை ஆகிய ஐந்து நற்பண்புகளுமே சான்றாண்மை எனும் பெருமையைத் தாங்கி நிற்கும் தூண்களாகும்.)

AI என்றாலே ஏதோ கடவுளுக்கு இணையான சக்தி என்றும், அது சுயமாகச் சிந்தித்து உலகை அழித்துவிடும் என்றும் '5 குருடர்களைப் போல' உணர்ச்சிவசப்பட்டுத் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், உண்மையான சான்றோர்களாக இயங்கும் சில யதார்த்தமான எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் எவ்வித போலி அலட்டலும் இன்றி, உண்மைக்கு (வாய்மைக்கு)ப் புறம்பான ஊகங்களைப் பரப்புவதற்கு அஞ்சி, AI தொழில்நுட்பத்தின் உண்மையான பலத்தையும் அதன் வரம்புகளையும் சாமானிய மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் நடுநிலையோடு விவரிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு எமர்ஜன்ட் மைன்ட் (Emergent Mind) என்ற புத்தகம் எனக்குப் பெருமளவில் பிடித்திருந்தது. 
ஏஐ (AI) உருவாக்கப்பட்டதின் அடிப்படை என்ன, நரம்பியல் (Neuroscience), மனித மனம் எப்படி வேலை செய்கிறது என்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான கையேடு. கணினி அறிவியல் அல்லது கோடிங் பின்னணி தேவையில்லை.

AI என்பது சுயமாகச் சிந்திக்கும் மாயாஜாலம் அல்ல; அது வெறும் புள்ளிவிவரத் தரவுகளை வைத்து அடுத்த வார்த்தையைக் கணிக்கும் Probabilistic Engine மட்டுமே என்பதை சான்றாண்மை மிக்க எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், AI-ஆல் சுயமாக உலகம் அழியாது; மாறாக அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களால் மட்டுமே ஆபத்து (Bioweapons, Cyberattacks, Deepfakes) என்பதை ஆதாரப்பூர்வமாகத் தெளிவாக விவரிக்கிறார்கள்.

AI யானையின் நிஜமான வடிவம் என்ன?

குருடர்களின் கதையைப் போல, AI-ன் ஒரு பகுதியை மட்டும் பார்த்து பீதியடைவதோ அல்லது மிதமிஞ்சிய ஆச்சரியமடைவதோ வீண்.

பலன்கள்: நிரலாக்கம் (Coding), தீர்ப்புவழிச் சட்டம் (Case Law), மருத்துவப் பரிசோதனைகள் (X-Rays, MRIs) போன்ற தரவு சார்ந்த பணிகளில் AI மனிதர்களை விட வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படுகிறது.

வரம்புகள்: ஆனால், எளிய மனிதத் தர்க்கங்களைப் புரிந்துகொள்வதில் அது இன்னும் தடுமாறுகிறது (Hallucinations). மனிதர்கள் கொடுக்கும் பழைய தரவுகளில் இருக்கும் பக்கச்சார்புகளையே (Biases) அது பிரதிபலிக்கிறது. உலக மாடல் பற்றிய அனுபவ அறிவு அதற்குக் கிடையாது. பக்கச்சார்புகளை விளக்கி AI மாடல்களை கூர்மைப் படுத்த மானிடவியல் (Anthropology) படித்த அறிஞர்கள் தேவை என்று இன்னொரு பதிவில் பார்த்தோம்.

சுருக்கம்

யானையின் ஏதோவொரு பகுதியை மட்டும் தொட்டுப் பார்த்துவிட்டு, அதைத் தன் கற்பனைக்கேற்பக் கடவுளாகவோ அல்லது அரக்கனாகவோ சித்தரிக்கும் கட்டுரைகளை வாசித்து நாம் குழப்பமடையத் தேவையில்லை.

இன்றைய ஊடக சூழலுக்குத் தேவைப்படுவது, பரபரப்புக்காகவும் 'வியூஸ்'களுக்காகவும் (views) எழுதப்படும் 'நவீன 5 குருடர்களின்' உணர்ச்சிவசப்பட்ட கட்டுரைகள் அல்ல! AI-ன் உண்மையான பலம், அதன் எல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் நிஜமான சமூக-பொருளாதார விளைவுகளைத் துல்லியமாக அலசும் தெளிவான, எதார்த்தமான கட்டுரைகளே ஆகும்.

கருத்துகள் இல்லை: