திங்கள், செப்டம்பர் 21, 2026

ஆர்பிஐ-யின் அபாயகரமான ஹெட்ஜிங் விளையாட்டு: டாலர் சவாலகளும் இந்திய ரூபாயின் எதிர்காலமும்!

ஆர்பிஐ-யின் ஹெட்ஜிங் விளையாட்டு -- டாலர் சவால்களும் இந்திய ரூபாயின் எதிர்காலமும்!: இந்தியப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலருக்கான தேவையும் விநியோகமும் எவ்வாறு உருவாகின்றன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்: இந்த பதிவுக்கு ஆதாரமாக உள்ளது இன்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் பதிப்பிட்ட கே பி கிருஷ்ணன் என்பவர் எழுதிய ஒரு கருத்துக் கட்டுரை.



1. இந்தியாவிற்கு டாலர் வரத்தின் முக்கிய ஆதாரங்கள் (Dollar Sources):

ஏற்றுமதி வருவாய் (Exporter Revenues): இந்திய ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்குப் பொருட்களை விற்று ஈட்டும் டாலர்கள்.

அன்னிய முதலீடுகள் (FPI & FDI): இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வுச் சந்தையை (ஏர் கண்டிஷனர், கார்கள், விலை உயர்ந்த செல்போன், மற்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரிப்பை) நம்பி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் செய்ய அல்லது இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய கொண்டு வரும் டாலர்கள். மற்றும் அவர்கள் டாலர் கொடுத்து வாங்கும் இந்திய கடன் பத்திரங்கள். 

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அனுப்புகைகள் (Remittances & FCNR): என்.ஆர்.ஐ-க்கள் இந்தியாவில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் அந்நியச் செலாவணி.

2. இந்தியாவில் இருந்து டாலர் வெளியேற்றத்தின் முதன்மைக் காரணங்கள் (Dollar Drains):

அத்தியாவசிய இறக்குமதிகள்: இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் தங்கத் தேவையில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், பெருமளவில் டாலர்களை வெளியேற்றுகிறது.

பிற இறக்குமதிகள்: நம் நாட்டில் தயாரிக்கும் கார், பேட்டரி, சோலார், மின்னணு சாதனங்கள், செல்போன்கள், மற்றும் கணினி போன்றவற்றுக்கு தேவையான உட்பொருட்களுக்கு நாம் வெளிநாடுகளையே நம்பியிருக்கிறோம். பெரிய அளவில் இறக்குமதி செய்கிறோம்.

வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit): நாம் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்வதால், தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து டாலர்களை கடன் வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

"டாலருக்கான விநியோகம் (Supply) குறையும் போது, கிடைக்கும் டாலரை வாங்க போட்டி ஏற்பட்டு ரூபாயின் மதிப்பு சரிவடைகிறது. மாறாக, டாலர் வரத்து அதிகரிக்கும் போது ரூபாயின் மதிப்பு வலுவடைகிறது."

3. ரிசர்வ் வங்கியின் (RBI) மூன்று முக்கிய கடமைகள்

இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ, பொருளாதாரச் சமநிலையைப் பேண மூன்று முக்கிய பொறுப்புகளில் கயிற்றின் மேல் நடப்பது போல நடக்க வேண்டியுள்ளது:

  1. அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும்போது, அந்நிய  முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள தங்களது நிதியைத் திரும்பப் பெறத் தொடங்குகிறார்கள். அப்போது சந்தையில் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு ரூபாய் மதிப்பைக் கடுமையாகப் பாதிக்காமல் இருக்க ஆர்பிஐ உடனடியாக தலையிட வேண்டியுள்ளது.
  2. இந்தியாவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் கடமை. இதனால் டாலர்-ரூபாய் மதிப்பை காப்பாற்றி ஒரே நிலையில் கட்டுப்படுத்துவது. 
  3. இந்திய பொருளாதாரத்தில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது. டாலர்கள் பெருமளவில் உள்ளே வரும் போது ஆர்பிஐ அந்த டாலர்களுக்கு நிகரான இந்தியப் பணத்தை வங்கிகளுக்குக் கொடுக்கும் போது இந்திய சந்தையில் பணப் புழக்கம் அதிகரிப்பதை கட்டுக்குள் வைப்பது.

4. ஆர்பிஐ-யின் புதிய ஹெட்ஜிங் உத்தி (Forward Swap Strategy)

முன்பெல்லாம் ஆர்பிஐ நேரடியாக சந்தையில் (Spot Market) டாலர்களை விற்று ரூபாயின் மதிப்பைக் காப்பாற்றும். ஆனால், சமீபத்தில் ஆர்பிஐ ஒரு மாறுபட்ட உத்தியைக் கையாண்டது. இந்த உத்தியின் பலனாய் இந்தியாவிற்கு குறுகிய காலத்தில் 136 பில்லியன் டாலர் வரவு வந்தது. அனைத்தும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் ஆர்பிஐ-யின் புதிய உத்தியை அறிந்தவுடன் அவசரமாக வரவு வைத்த வைப்புத் தொகை (FCNR deposit).

புதிய உத்தி: வங்கிகள் FCNR டெபாசிட்கள் மூலம் திரட்டும் டாலர்களை ஆர்பிஐ-யிடம் தற்போதைய மாற்று விகிதத்தில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் முதிவடையும் போது (3-5 ஆண்டுகள் கழித்து), சந்தையில் ரூபாயின் மதிப்பு எவ்வளவு சரிந்திருந்தாலும், அதே பழைய மாற்று விகிதத்திலேயே டாலர் திருப்பித் தரப்படும் என ஆர்பிஐ உத்தரவாதம் அளித்தது. இதுதான் ஆர்பிஐ கொண்டு வந்த புதிய உத்தி. இந்த உத்திக்கு மேற்கூறியபடி கைமேல் பலனும் கிடைத்தது. இந்த உத்தியை ஒருமுறை மட்டுமே உபயோகிப்பதாக ஆர்பிஐ அறிவித்திருக்கிறது.

எளிய உதாரணம்:

இன்றைய நிலை: வங்கிகள் ஆர்பிஐ-யிடம் 1 டாலரை ₹96 என்ற விகிதத்தில் டெபாசிட் செய்கின்றன.

3 ஆண்டுகள் கழித்து: ஒருவேளை ரூபாய் மதிப்பும் சரிந்து 1 டாலர் = ₹99 ஆக மாறினாலும், ஆர்பிஐ பழைய ₹96 என்ற கணக்கிலேயே டாலரைத் திருப்பித் தரும்.

இழப்பு யாருக்கு?: இந்த ₹3 வித்தியாசத்தை ஆர்பிஐ தனது சொந்தக் கணக்கிலிருந்தே ஏற்கும். இதுவே வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் ‘ஹெட்ஜிங் வசதி’ (Hedging Facility) ஆகும்.

5. இந்த உத்தியின் நன்மைகள், ஆபத்துகள் மற்றும் பணவீக்கம்

இந்த அணுகுமுறை இந்திய வங்கித்துறைக்கு உடனடிப் பலனைத் தந்தாலும், இதில் பல பொருளாதாரச் சவால்கள் ஒளிந்துள்ளன:

நன்மைகள்:

இந்திய சந்தைக்குள் சுமார் $136 பில்லியன் டாலர் அளவிலான புதிய வைப்புத்தொகைகள் திரண்டு, டாலர் கையிருப்பு தற்காலிகமாகப் பெருகியது.

ஆபத்துகள் & சவால்கள்:

ஆர்பிஐ-யின் நிதி இழப்பு அபாயம்: அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தால் (இந்தியாவில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்ததாக சரித்திரம் இல்லை), ஆர்பிஐ மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்.

உள்நாட்டுப் பணவீக்கம் (Inflation): டாலரைப் பெற்றுக் கொண்டு ஆர்பிஐ வங்கிகளுக்கு இணையான ரூபாயை மாற்றிக் கொடுத்ததால், நாட்டின் உள்நாட்டுப் பணப்புழக்கம் (Money Supply) பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆர்பிஐ வேறு உத்தியை (VRRR) கையாண்டு இந்த சவாலை சமாளித்துள்ளது. 

எண்ணெய் விலை உயர்வு: மத்திய கிழக்கில் நடக்கும் போர்கள் மற்றும் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, அதிகரிக்கும் இறக்குமதிச் செலவும், இந்த கூடுதல் பணப்புழக்கமும் சேர்ந்து பணவீக்கத்தைக் (Inflation) மேலும் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

6. நீண்டகாலத் தீர்வு: இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ஆர்பிஐ கயிற்றின் மீது நடப்பது போன்ற இந்த ஆபத்தான நிதியியல் விளையாட்டைத் தவிர்க்க வேண்டுமானால், இந்தியா பின்வரும் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்:

  1. எரிசக்தி சுயசார்பு (Energy Independence): கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையைக் குறைக்க உள்நாட்டு மாற்று எரிசக்தித் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். நம் நாட்டில் கச்சா எண்ணெய் கிடைப்பதில்லை.
  2. உற்பத்தித் திறன் உயர்வு (Productivity): உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
  3. தரமான ஏற்றுமதி: வெளிநாட்டவர்கள் விரும்பும் வகையில் இந்தியத் தயாரிப்புகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அப்படி உயர்த்தி வெற்றிபெறும் ஏற்றுமதியாளர்களை மேலும் ஊக்கப் படுத்த வேண்டும். 

சுருக்கம்

ஆர்பிஐ 'ஹெட்ஜிங்' சலுகைகள் மூலம் தற்காலிகமாக $136 பில்லியன் டாலர்களை ஈர்த்திருந்தாலும், அது ஒரு தற்காலிகத் தடுப்புச்சுவர் மட்டுமே. ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவு, உள்நாட்டுப் பணவீக்கம், மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள்வது ஆர்பிஐ-க்கு ஒரு பெரும் சவாலாகும். இறக்குமதிச் சார்பைக் குறைப்பதே இந்தியாவிற்கு நிரந்தரப் பாதுகாப்பாகும்! 

1. பிசினஸ் ஸ்டாண்டர்ட் கருத்துக் கட்டுரை 
2. அந்நிய  முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள தங்களது நிதியைத் திரும்பப் பெறத் தொடங்குகிறார்கள்
3. 
உட்பொருட்களுக்கு நாம் வெளிநாடுகளையே நம்பியிருக்கிறோம்

கருத்துகள் இல்லை: