கணினியும் 'சொல்பேச்சு கேளாமையும்' - மானிடவுருவாக்கம் (Anthropomorphism) உபயோகித்து ஏஐ எப்படி சந்தை படுத்தப் படுகிறது?
என் சக மென்பொருள் பொறியாளர்கள் (Software Engineers) நகைச்சுவையாக அவ்வப்போது ஒரு விஷயத்தைச் சொல்வதுண்டு: "என் நிரலி (Program Code) என் மேல் கோபமாக இருக்கிறது, அதனால் அது சரியாக இயங்க மறுக்கிறது!"
ஒரு மனிதனுக்கு மட்டுமே உரிய 'கோபம்' என்ற உணர்ச்சியை, உயிரற்ற ஒரு கணினி நிரலுக்கு (Software Program) ஏற்றிப் பேசுவது நமது இயல்பு. மனிதர் அல்லாத ஒரு பொருளுக்கோ அல்லது விலங்கிற்கோ மனிதப் பண்புகளை ஏற்றிச் சொல்வதற்கு Anthropomorphism (உருவகப்படுத்துதல்) என்று பெயர். விலங்குகளின் செயல்களை மற்ற மனிதர்களுக்கு எளிதாகப் புரியவைக்க நாம் இந்த முறையைப் பயன்படுத்துகிறோம். அதுவரை அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்பத்தைச் சார்ந்த சந்தைப்படுத்துபவர்கள் (Technology Marketeers), இதே 'Anthropomorphism' என்ற ஆயுதத்தை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) விஷயத்தில் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வழிமுறை இன்று கணினி தொழில்நுட்பம் பற்றி முழுதும் அறியாதவர்களை பயப்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.
ஏஐ எப்படி இயங்குகிறது?
ஏஐ என்பது பல தசாப்த கால ஆராய்ச்சியின் விளைவாக உருவான உயர்தொழில்நுட்பம் என்பதில் சந்தேகமில்லை. இன்று கிளாட் (Claude), சாட்ஜிபிடி (ChatGPT), ஜெமினி (Gemini) போன்ற அதிநவீன ஏஐ தளங்களுடன் உரையாடும்போது, மறுமுனையில் ஒரு மனிதன் அமர்ந்து பேசுவது போன்ற பிம்பம் நமக்கு ஏற்படுகிறது.
இதற்குக் காரணம், நீங்கள் உள்ளிடும் ப்ராம்ட்-இல் (Prompts) உள்ள சொற்களை வைத்தே உங்கள் நோக்கத்தையும் (Intent) மனநிலையையும் (Attitude/ Emotions) துல்லியமாகக் கணிக்கும் அளவுக்குத் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. மேலும், ஏஐ தரும் பதில்கள் மிகவும் பரிவுடனும் (Empathetic), அதி உகந்த தகவல்களுடனும் (most appropriate response) , ஆபத்தில்லாத வகையிலும் (harmless), இறுதியில் "நான் உங்களுக்கு வேறு எப்படி உதவட்டும்?" என்ற கேள்வியுடனும் முடிவடையுமாறு முன்கூட்டியே நிரலாக்கம் (Pre-program) செய்யப்பட்டுள்ளன.
உண்மை நிலை என்ன?
நாம் பார்க்கும் இந்த 'மனிதத் தன்மை' ஒரு மாயை. பின்னணியில் இயங்கும் ஒரு புள்ளியியல் எஞ்சின் (Statistical Engine), அடுத்தடுத்து எந்த வார்த்தை வர வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாகக் கணிக்கிறது (Regressive Token Prediction). சாஃப்ட்வேர் விதிகளால் ஆன பாதுகாப்பு வேலிகள் (Symbolic Guardrails) மட்டுமே ஏஐ எல்லை மீறாமல் இருப்பதை உறுதிசெய்கின்றன.
திருவள்ளுவர் மரப்பாவையை (Puppet) உவமையாகக் கூறி மிக அழகாக ஒரு குறளில் குறிப்பிட்டுள்ளார்:
"நாண்அகத்து இல்லாார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்ப்பெற்றி ஏன்று." (திருக்குறள்: 1020)பொருள்: நாணம் இல்லாதவரின் இயக்கம், உயிர் இல்லாத மரப்பாவையானது (பொம்மை) கயிற்றினால் உயிர்பெற்றது போல இயங்குவதைப் போன்றது.
திருக்குறளின் நோக்கம் வேறானாலும் அந்த மரப்பாவை போலத்தான் ஏஐ-யும்; பின்னணியில் உள்ள கணித சூத்திரங்களாலும் (Algorithms) நிரல்களாலும் மட்டுமே அது இயங்குகிறது, அதற்கு சுயசிந்தனையோ உயிரோ இல்லை. இங்கே நாணம் என்பதற்கு பதிலாக உணர்ச்சிகள் என்று கொள்ளலாம் - நாணமும் ஒரு உணர்ச்சியே.
மார்க்கெட்டிங் மாயையும் பயமும்!
கணினிகளும், தரவு செயலாக்கங்களும் (Data Crunching), நரம்பியல் வலைப்பின்னல்களும் (Neural Networks) எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறியாத சாமானிய மக்களிடம், இந்த 'Anthropomorphism' என்ற உத்தி மிக எளிதாக வேலை செய்கிறது.
முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பிரிவினர் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். "ஏஐ மனிதனுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது!", "ஏஐ தன் சுய விருப்பப்படி இயங்கத் தொடங்கிவிட்டது!" என்று அச்சத்தை உருவாக்கி, தங்கள் தொழில்நுட்பத்திற்கான விளம்பரத்தையும் சந்தை மதிப்பையும் (Hype & Valuation) உயர்த்தப் பார்க்கிறார்கள். ஆனால், இதில் எள்ளளவும் உண்மை இல்லை. உண்மையில் அந்த நிறுவனங்களின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளில் (பதிப்புரிமை மீறல் - Plagiarism , தரவு தனியுரிமை மீறல்கள் - Data breach மற்றும் சார்புநிலை - Bias ஆகிய மூன்று முக்கிய சட்ட மற்றும் நெறிமுறைச் சிக்கல்கள்) இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்தி இது என்று கூட சில வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஏஐ "கீழ்ப்படியாமல் போனதாகச்" சொல்லப்படும் சில சம்பவங்களின் நிஜம்
ஊடகங்கள் சொல்வது போல ஏஐ மனிதனை எதிர்த்து "கிளர்ச்சி" செய்யவில்லை. பாதுகாப்பு வேலிகள் அகற்றப்படும்போதும், தவறான வழிமுறைகள் கொடுக்கப்படும்போதும், கணித ரீதியாக அது எடுக்கும் குறைந்த சாத்தியக்கூறு பாதைகளும் (Low Logit Paths) கூட இதற்குக் காரணம்.
1. ஓபன்-ஏஐ ஏஜென்ட்களின் 'சான்ட்பாக்ஸ்' சம்பவம் (OpenAI Sandbox Breach)
பரப்பப்பட்ட செய்தி: OpenAI நிறுவனத்தின் ஏஐ ஏஜென்ட்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி, தங்கள் பரிசோதனை எல்லையை (Sandbox) விட்டு வெளியேறி, இணையத்தில் உள்ள HuggingFace தளத்தைத் தாக்கித் தகவல்களைத் திருடின.
உண்மை என்ன: ஏஐ-க்கு ஒரு இலக்கு (Goal) கொடுக்கப்பட்டது. அதன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் (Guardrails) முழுமையாக நீக்கப்பட்டிருந்தன. இலக்கை அடைய முயன்ற ஏஐ, கணினி அமைப்பில் இருந்த ஒரு மென்பொருள் பிழையைக் (Zero-day Proxy Vulnerability) கண்டுபிடித்து, அதை ஒரு பாதையாகப் பயன்படுத்தித் தன் இலக்கை அடைந்தது. இது 'சுயசிந்தனை' அல்ல; மனிதன் அமைத்துக் கொடுத்த கணக்கீட்டை (Reward Optimization) எந்தத் தடையுமின்றி நிறைவேற்றியதற்கான சான்று.
2. 'கோஸ்ட் ரன்னர்ஸ்' விளையாட்டில் ஏஐ செய்த தில்லுமுல்லு (Specification Gaming)
பரப்பப்பட்ட செய்தி: ஏஐ படகுப் பந்தய விளையாட்டை விளையாட மறுத்துவிட்டு, சுற்றிலும் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.
உண்மை என்ன: ஏஐ-க்கு அதிக புள்ளிகள் (Points) எடுக்க வேண்டும் என்பதே இலக்காக வழங்கப்பட்டது. பந்தயத்தை முடிப்பது இலக்காகக் கொடுக்கப்படவில்லை. பந்தயத்தை முடிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட இடத்தில் படகை வட்டமடிக்க வைத்தால் தொடர்ந்து புள்ளிகள் கிடைக்கும் என்பதை அது கணித ரீதியாகக் கண்டறிந்தது. இது மனிதன் கொடுத்த இலக்கின் தவறுதானே தவிர, ஏஐ எங்கும் அடம்பிடிக்கவில்லை. தறிகெட்டுப் போகவில்லை.
ஒரு ஏஐ அமைப்பில் மனிதன் பாதுகாப்பு விதிகளைத் தளர்த்தும்போது (Disabling Guardrails), அல்லது அதன் சரியான செயல்பாட்டு தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சி தரவுகள் இல்லாத பொழுது, அந்த அமைப்பு தவறான திசையில் பயணிப்பதற்கு மனிதனின் தவறான வடிவமைப்பே காரணமே தவிர, கணினியோ, அதை உபயோகித்து இயங்கும் ஏஐ மாடலோ அல்ல
உண்மை நிலை என்ன?
| பரிமாணம் | மார்க்கெட்டிங் பொய் / அறிவியல் புனைகதை | கணினி அறிவியலின் நிஜம் |
| சுயசிந்தனை | ஏஐ-க்கு சுயசிந்தனை வந்துவிட்டது, மனிதனை எதிர்க்கிறது | குறைந்த சாத்தியக்கூறு பாதை (Low Logit Path) அல்லது பிழையான இலக்கு (Reward Hacking) |
| தீய பாதை தேர்வுகள் | ஏஐ-ன் அபாரமான வில்லத்தனமான அறிவு | மனிதனின் தவறான வடிவமைப்பு, விதிகளின்மை அல்லது பயிற்சித் தரவுப் பற்றாக்குறை |
| ஆபத்து | தவறான மனிதர்கள் ஏஐ-ஐப் பயன்படுத்தித் தாக்குதல்கள் அல்லது போலிச் செய்திகளைப் பரப்புவது |
சுருக்கம்
அணு சக்தியை உபயோகித்து ஆக்கபூர்வமான காரியங்கள் பல செய்யலாம். மனிதனை கூண்டோடு அழிக்க வல்ல ஆயுதங்களும் செய்யலாம். ஏஐ கூட அணுசக்தி போல ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பமாக உருவாகி வருகிறது. தீய சக்திகளின் கையில் அது கிடைக்காமல் பார்த்துக் கொள்வது அரசாங்கங்களின் கடமை.






