புதன், செப்டம்பர் 02, 2026

இந்தியா சொந்தமாக AI சில்லுகளை (AI Chips) வடிவமைக்க முடியுமா?

AI சில்லுக்கள்


கணினிகளில் CPU-கள் இயங்குவதையும், இன்டெல் (Intel), ஏஎம்டி (AMD) மற்றும் ஆப்பிள் (Apple) ஆகிய நிறுவனங்கள் CPU-களைத் தயாரித்து வருவதையும் நாம் அறிவோம். ஆனால் AI-ன் வருகைக்குப் பிறகு, ஒரு நியூரல்  நெட்வொர்க்கில் (neural network) உள்ள பல்லாயிரக்கணக்கான நோட்களையும்  (Nodes) கோடிக்கணக்கான அளவுகோல்களையும் (Parameters) கையாள வேண்டியுள்ளது—முதலில் மாடலைப் பயிற்றுவிக்கவும் (Training), பின்னர் பயிற்சி பெற்ற மாடலை மின்னல் வேகத்தில் கணிப்புகளைச் செய்ய வைக்கவும் (Inference). இதற்காக ஆயிரக்கணக்கான CPU-கள் ஒரே நேரத்தில் இணையாக (Parallel Processing) இயங்கி, அதிவேகத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக்கூடிய பிரத்யேக AI சில்லுகள் இந்தியாவிக்கு 
  • டிஜிட்டல் பிளவை (digital divide) கட்டுக்குள் வைக்கவும், 
  • சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளையும், வாழ்க்கைத் தர உயர்வையும் வழங்கும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தவும்
மிகவும் தேவை.

NVIDIA உலகின் தலைசிறந்த AI சில்லுக்கள் தயாரிப்பு நிறுவனம் 


இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனமான என்விடியா (NVIDIA) உலகளவில் முன்னணியில் உள்ளது. ஆரம்பத்தில் கிராபிக்ஸ் பணிகளுக்காக அவர்கள் உருவாக்கிய GPU-க்கள், AI ஆராய்ச்சிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதைச் சரியாகப் பயன்படுத்திய என்விடியா, பெரிய AI தரவு மையங்களை (Data Centers) இயக்கும் பிரம்மாண்ட AI சில்லுகளை வடிவமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியது.

இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மை தொலைநோக்கு

இருப்பினும், இந்தியா போன்ற நாடுகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்க அரசு மறுத்த வரலாறு உள்ளது. 1980-களில் அமெரிக்கா கிரே (Cray) சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க மறுத்துத் தடை விதித்தபோது, இந்தியா தயங்கவில்லை. அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ள 1988-ல் C-DAC (Centre for Development of Advanced Computing) அமைப்பை உருவாக்கியது.




C-DAC நிறுவனம் PARAM தொடர் சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக உருவாக்கி, இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மேலும், RISC-V திறந்தநிலை கட்டமைப்பில் வேகா (VEGA) நுண்செலிகளை (Microprocessors) உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தனது வன்பொருள் (hardware) வடிவமைப்புத் திறனை மெய்ப்பித்தது.

இப்போது AI சில்லுகளுக்கும் இதே போன்ற ஒரு நிலை வரலாம். அமெரிக்கா ஏற்கனவே பிற நாடுகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது இந்தியா AI சில்லுகளை இறக்குமதி செய்ய நேரடித் தடைகள் எதுவும் இல்லை என்றாலும், எதிர்கால பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையைக் (sovereignty) கருதி, 2030-க்குள் 2nm AI சிப்பை உருவாக்க C-DAC நிறுவனத்திற்கு இந்திய அரசு மீண்டும் பொறுப்பளித்துள்ளது. இந்த சிப்பின் வடிவமைப்பு (Design) மற்றும் காப்புரிமையை (Patent) இந்தியா சொந்தமாக வைத்திருக்கும். ஆனால், 2nm அளவிலான அதிநவீன சில்லுகளை உற்பத்தி செய்யும் (Fabrication) வசதி இந்தியாவில் இல்லாததால், இதன் தயாரிப்பு தைவானின் TSMC நிறுவனம் போன்ற உலகளாவிய ஃபேப் மையங்கள் (Global Fab Centers) மூலம் மேற்கொள்ளப்படும்.

AI சில்லுகளை வடிவமைக்கும் பண பலமும் ஆள் பலமும் இந்தியாவிடம் உள்ளதா?


C-DAC இந்த இலக்கை எட்டத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பப் பலத்தைக் கொண்டுள்ளது. தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் மற்றும் மத்திய அரசின் ₹1.27 லட்சம் கோடி மதிப்பிலான Semicon 2.0 திட்டத்தின் ஆதரவுடன், சுமார் $200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், C-DAC வடிவமைத்துள்ள இந்த AI சிப்பின் செயல்திறன் மற்றும் வடிவமைப்புச் சோதனைகளை மேற்கொள்ள GeM தளம் வழியாக HCL Infosystems நிறுவனம் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2030 என்ற இலக்கு சாத்தியமா?

2030-க்குள் 2nm AI சிப் என்ற இலக்கு சாத்தியமான ஒன்றாகும். ஏனெனில் 2nm என்பது கேட்-ஆல்-அரவுண்ட் (GAAFET) எனப்படும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு மாறும் முக்கிய கட்டமாகும். உலகளவில் 2025-2026ல் தான் 2nm உற்பத்தி தொடங்குகிறது என்பதால், 2028-2030ல் இதுவே பிரதான தரநிலையாக (Mainstream standard) இருக்கும். மேலும், C-DAC-ன் பிரதான இலக்கு பயிற்சி (Training) சில்லுகளுக்குப் போட்டியிடுவது அல்ல; மாறாக இந்தியத் தேவைகளுக்கான Inference சில்லுகளைக் குறைந்த செலவில் தயாரிப்பதே ஆகும்.

Mint இதழில் வெளியான செய்தியின்படி, C-DAC உருவாக்கும் இந்த இந்திய AI சிப், நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, Bhashini/Sarvam போன்ற பல்லூடக் குரல் வழி AI மாதிரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த அமைப்புகளுக்குப் பாதுகாப்பு மிக்க, சொந்த கணக்கீட்டுச் சாத்தியத்தை வழங்கும். நமது சுயசார்பு தொலைநோக்கை சாத்தியப் படுத்தும்.

சுருக்கம்

'நாமார்க்கும் குடியல்லோம்' என்ற தமிழ் வாக்குப் படி, தொழில்நுட்பத்தின் உச்சத்திலும் எல்லையிலும் இயங்குவதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்தியா ஏற்கனவே நிரூபித்துள்ளது. உலகளவில் எந்தவொரு நாட்டின் அச்சுறுத்தலுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை. நாம் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், அடக்கத்துடனும், சுதந்திரமாகவும், சுயசார்புடனும் இயங்கவே முயல்வோம். இதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கும் மாபெரும் லட்சியப் பயணத்தில் நாம் இறங்கியுள்ளோம். இது எளிதான ஒன்றல்ல; இந்த லட்சியத்தை அடைந்து முன்னோக்கிச் செல்ல மிகுந்த தேசபக்தியும், அர்ப்பணிப்பும், உறுதியான கவனமும் தேவைப்படுகிறது.

இத்தொழில்நுட்ப முயற்சி குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள, C-DAC-ன் AI சிப் சோதனை மற்றும் Semicon 2.0 திட்டம் குறித்த இந்த வீடியோவைப் பார்க்கலாம்: India's ₹1.28 Lakh Crore Bet on Beating Nvidia's AI Chip Monopoly.


கருத்துகள் இல்லை: