ஐயன் வள்ளுவரின் ஒரு கூறளுடன் ஆரம்பிக்கலாம்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு." (குறள்: 385)
பொருள்: புதிய வழிகளில் செல்வத்தை உருவாக்குவது, அதைச் சேகரிப்பது, பாதுகாப்பது, மற்றும் அந்தச் செல்வத்தை மக்களின் நலனுக்காகச் சமமாகப் பகிர்ந்து (வகுத்து) நிர்வகிப்பதே ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
அமெரிக்க வரிச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?
தற்போதைய அமெரிக்க வரிச் சட்டங்களின்படி, முதலீடுகள் அல்லது மூலதனத்தை (capital) விட உழைப்பிற்குத் (labor) தான் மிக அதிகமான வரி விதிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் உடனடி ஊதிய வரிகளையும் (Social Security, Medicare) மற்றும் படிப்படியாக உயரும் வருமான வரிகளையும் செலுத்துகிறார்கள். ஆனால், மூலதன ஆதாயங்கள் (capital gains) மற்றும் நிறுவனங்களின் இலாபங்களுக்கு பெரும்பாலும் குறைவான வரியே விதிக்கப்படுகிறது; அல்லது அவை சட்டப்பூர்வமாகத் தள்ளிப்போடப்பட்டு, வரியிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
ஏஐ எத்தகைய பொருளாதார தாக்கத்தை விளைவிக்கக் கூடும்?
செயற்கை நுண்ணறிவின் (AI) நீண்டகாலத் தாக்கம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இருப்பினும், தங்கள் தொழில்நுட்பம் மனித உழைப்பிற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்று பல AI நிறுவனங்கள் கூறுகின்றன. இது நிஜமானால், வேலை இழக்கும் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இழப்பார்கள், இதனால் அவர்கள் செலுத்தும் வரியும் குறையும்.

அதே நேரத்தில், பணிகளை வெற்றிகரமாகத் தானியங்கிமயமாக்கும் (automate) நிறுவனங்கள், தங்களின் ஊதியச் செலவைக் பெருமளவில் மிச்சப்படுத்தும். இந்தச் சேமிப்பைக் கொண்டு அவர்கள் ஒரு சில பணக்கார முதலீட்டாளர்களை மேலும் பணக்காரர்களாக்குவார்கள், அல்லது அந்தத் தொழில்நுட்பத்தை வழங்கிய AI நிறுவனங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள். இது AI நிறுவனங்களின் நிறுவனர்களையும் முதலீட்டாளர்களையும் மட்டுமே பெரும் பணக்காரர்களாக்கும்.
நான்கு சாத்தியக் கூறுகள்
இந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் காரென் டைனன் (Karen Dynan) மற்றும் டக்ளஸ் எல்மென்டார்ஃப் (Douglas Elmendorf), மற்றும் புருக்கிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த லூயிஸ் ஷீனர் (Louise Sheiner) ஆகியோர், AI-ஆல் உருவாகும் பல்வேறு பொருளாதாரப் பாதைகள் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் தேசியக் கடனை எவ்வாறு பாதிக்கும் என்று ஆராய்ந்தனர். இந்த ஆய்வு, "How Might Fiscal Policy Respond to the Rise of Artificial Intelligence?" என்ற தலைப்பில் ஜூலை 2026 இல் வெளியிடப்பட்டது.
அவர்கள் எதிர்கால சாத்தியக்கூறுகளை நான்கு வெவ்வேறு பாதைகளாகப் பிரித்துள்ளனர்:
- சூழ்நிலை 1 (மிகவும் சாதகமானது): AI தொழில்நுட்பம் நாட்டின் உற்பத்தித் திறனைப் பெருமளவில் உயர்த்துகிறது, மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒட்டுமொத்த மக்களுக்கும் பரவலாகக் கிடைக்கிறது. இதனால் வரி வருவாய் கணிசமாக அதிகரித்து, நாட்டின் கடன்-ஜிடிபி (debt-to-GDP) விகிதம் உயர்வது குறைகிறது.
- சூழ்நிலை 2 (மத்தியமமானது): AI மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, ஆனால் அந்த இலாபங்கள் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் சில தொழிலாளர்களிடம் மட்டுமே குவிகிறது. பொருளாதாரம் வளர்ந்தாலும், இந்த சமமற்ற வருவாய் பரவலான வரி வசூலிப்பைக் கடினமாக்குகிறது, மேலும் பொதுக் கொள்கை ரீதியான அழுத்தங்களை உருவாக்குகிறது.
- சூழ்நிலை 3 (சாதகமற்ற ஆபத்து): வருமானம் உழைப்பாளர்களிடமிருந்து மாறி, மூலதனமாக (நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்கள்) குவிகிறது. மனித உழைப்பை விட AI-இன் இலாபங்களுக்குக் குறைவான வரியே விதிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பட்ஜெட் முன்னேற்றம் கடுமையாக முடங்குகிறது.
- சூழ்நிலை 4 (மிகவும் மோசமானது): AI பெருமளவிலான வேலை இழப்புகளையும் வேலைவாய்ப்பு மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது, இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், தொழிலாளர்களுக்கான மறுபயிற்சிகள் மற்றும் சமூக நலச் செலவுகளின் அவசியத்தால் இது அரசாங்க பட்ஜெட்டிற்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
சுருக்கம்
இறுதியாக, AI எந்தப் பாதையை நோக்கி நகரும் என்பது இன்னும் ஆழமான நிச்சயமற்ற தன்மையிலேயே உள்ளது. அரசாங்கம் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வள்ளுவர் கூறியது போல, தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு சில நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஈட்டும்போது, அரசாங்கம் அதன் பலன்களைச் சரியாக 'வகுத்து' முறைப்படுத்த வேண்டும்.
AI-ஆல் கிடைக்கும் மூலதன இலாபங்களைச் சரியாக வரி வசூல் செய்வதை உறுதி செய்யும் வகையில் கொள்கை வகுப்பாளர்கள் வரி முறையை முன்கூட்டியே சீரமைக்க வேண்டும். அதே நேரத்தில், வேலைவாய்ப்புப் பாதிப்புகள் தீவிரமடைவதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதற்கான நெகிழ்வான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் வடிவமைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக