ஞாயிறு, செப்டம்பர் 06, 2026

ஏஐ உலகை கைக்குள் அடக்கிவிடும் என்றார்களே? நேபாள பனிப்பாறை பேரிடரை அதனால் ஏன் கணிக்க முடியவில்லை?

அப்படி கணித்திருந்தால் இந்நேரம் ஆயிரக்கணக்கான உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமே?


ஏஐ இன்னமும் தவழும் குழந்தை போன்றது

முன்னறிவிக்கும் திறன் கொண்ட AI (Predictive AI) என்பது இன்னும் தவழும் குழந்தையாகத் தான் இருக்கிறது; மிஞ்சிப்போனால் அது சற்றே வளர்ந்த ஒரு குழந்தை (Toddler) எனலாம். அதன் அறிவு என்பது, அதற்குப் பயிற்றுவிப்பதற்காக வழங்கப்பட்ட பழைய உரை (Text), ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படக் காப்பகங்களை (Archives) மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஒரு AI மாடலுக்குப் பயிற்சியளித்து முடிப்பதற்குள்ளேயே, இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய தகவல்களும் ஆய்வுகளும் வந்து குவிகின்றன.

உலகளவில் நாளொன்றுக்கு 14,000-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் (ஆண்டுக்கு 5 மில்லியன்) வெளியாகின்றன. யூடியூப்பில் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன (அவை ஒவ்வொன்றின் நேர அளவைக் கூட்டினால் சுமார் 500 மணி நேரம் வரும்!).


இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு LLM மாடலை எப்போதும் நிகழ்நேரத் தகவல்களுடன் (Real-time) புதுப்பித்துக்கொண்டே இருப்பது சாத்தியமற்றது—இதுவும் மனிதன் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துள்ள அறிவுக்கு மட்டுமே பொருந்தும்!

ஏஐ-க்கு மனிதனைப் போல அனுபவ அறிவு கிடையாது

இயற்கைப் பேரிடர்களைக் கணிக்க வேண்டுமானால், புத்தகங்களில் எழுதப்பட்ட இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட நிஜ உலக இயக்கங்களை AI தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, நாம் பனியின் மேல் எப்படி வழுக்கி விழாமல் நடப்பது என்பதைப் புத்தகங்களைப் படித்துக் கற்றுக்கொள்வதில்லை; அனுபவத்தில்தான் கற்றுக்கொள்கிறோம்.

ஏஐ-க்கு இந்த உலக அனுபவம் கிடையாது. இந்த அனுபவத்தை ஏஐ-க்கு புகுத்த வல்லுனர்கள் பலர் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், பனிப்பொழிவு அல்லது புயல் வீசும் கடுமையான வானிலையில் ஒரு தானியங்கி கார் (Autonomous Car) எப்படிச் செயல்படும் என்பதை AI-யால் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை. இன்றைய முன்னணி AI தொழில்நுட்பம் கூட அத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளில், பாதுகாப்பு கருதி காரின் கட்டுப்பாட்டை மனிதனிடம் ஒப்படைத்துவிடுகிறது அல்லது ஓரிடத்திலேயே வாகனத்தை நிறுத்திவிடுகிறது.

உள்கட்டமைப்புப் பற்றாக்குறை - சென்சார்கள் இல்லை

இந்த வரம்புகளுடன் சேர்த்து, மிகப்பெரிய கண்ணுக்குத் தெரியாத உள்கட்டமைப்புப் பற்றாக்குறையும் (Physical Blind Spot) உள்ளது. இமயமலை போன்ற மிக உயரமான, கடுமையான காலநிலை நிலவும் பகுதிகளில், சென்சார்களை நேரில் கொண்டு சென்று பொருத்துவதற்கோ அல்லது அவற்றைப் பராமரிப்பதற்கோ மனிதர்களால் உயிருக்கு ஆபத்தின்றிச் செயல்பட முடியாது. மேலும், பனிப்பாறைகளின் அடியில் ஆழமாக உருவாகும் நுண் பிளவுகளை (Sub-surface ice cracks) தரைவழி சென்சார்களாலோ அல்லது செயற்கைக்கோள்களாலோ கண்டறிவது தற்போதைய தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகும். உலகளவில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பிலேயே இத்தகைய சென்சார்கள் உள்ளன. எனவே, ஒருவேளை இதற்கான AI மாதிரி (World model AI) தயாராக இருந்தாலும்கூட, அதற்குத் தேவையான தரவுகளை வழங்கும் சென்சார் கட்டமைப்பு இங்கு இல்லை!

அதிவேகமாகச் சீறிய இயற்கை

நேபாள எல்லைக்கு அருகிலுள்ள தொங்கும் பனிப்பாறை சரிந்து விழுந்தபோது, பனி, பாறை மற்றும் சேறு கலந்த வெள்ளம் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் மலைச்சரிவில் சீறிப்பாய்ந்தது. அது சில நிமிடங்களிலேயே ஆற்றோர கிராமங்களையும் உள்கட்டமைப்புகளையும் அடித்துச் சென்றது. இந்தத் திடீர் பேரிடரின் வேகம், செயற்கைக்கோள் தரவுகளைப் பெற்று, AI மூலம் பகுப்பாய்வு செய்து, எச்சரிக்கை மணி அடிப்பதற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டது. பருவமழை வெள்ளத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நதி நீர் அளவுக் கருவிகளால் இந்த அதிவேகப் பனிச்சரிவைக் கணிக்க முடியவில்லை; பல இடங்களில் அளவுக் கருவிகளே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் சொல்கிறார்கள்.

அளவற்ற வாக்குறுதிகளும் திருவள்ளுவர் எச்சரிக்கையும்


"தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்."

(பொருள்: பின்னணி மற்றும் வரும் பயனைத் தெளிவாக ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்கமாட்டார்கள்; அதனால் ஏற்படும் பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர்கள்.)

AI உலகத்தை மிக விரைவிலேயே ஆளப்போகிறது என்று மிகைப்படுத்தி விளம்பரம் செய்து வந்த AI சந்தைப்படுத்துபவர்களை (AI marketeers) மனதில் வைத்தே திருவள்ளுவர் இக்குறளை எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது!

இயற்கையைக் கணிப்பதும் அதன் அடுத்த நகர்வுகளைக் கட்டியம் கூறுவதும் எல்லா நேரங்களிலும் சாத்தியப்படப் போவதில்லை.

சுருக்கம்

World Model AI தொழில்நுட்பம் முழுமையாக வளர்ச்சியடைந்து, நிகழ்நேர சுற்றுச்சூழல் IoT நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும் வரை, இயற்கையின் திடீர் மாற்ற முனைகளை (Physical edge cases) முன்கூட்டியே கணிப்பதை விட, பேரிடர் நடந்த பிறகு தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் கருவியாக மட்டுமே AI இருக்கும். மனித உயிர்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் இத்தகைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவது அதிக லாபம் தரும் வணிகம் அல்ல என்பதால், அரசுகளே இதில் நேரடியாகப் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: