Meta Muse First Mover Advantage நிலைக்குமா? நாம் ஏற்கனவே நமது முந்தைய பதிவில் Meta நிறுவனத்தின் Muse செயலியைப் பற்றித் தெளிவாகப் பார்த்திருந்தோம். வெளியான் குறுகிய காலத்திலேயே பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆப், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உற்பத்தித்திறன் (Productivity) பிரிவில் #1 இடத்தைப் பிடித்துள்ளதுடன் 44,000-க்கும் மேற்பட்ட பயனர்களின் மதிப்பீடுகளையும் (Ratings) பெற்றுத் தீவிரமாகப் பரவி வருகிறது.
மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள Muse, சாதாரண உரையாடல் செயலிகளை விட முற்றிலும் மாறுபட்ட, தன்முனைப்புடன் செயல்படக்கூடிய முதல் Autonomous AI Agent ஆகும். மெட்டா நிறுவனம் இதற்கு பல்வேறு அடுக்குச் சந்தா மாடலை (Multi-tier subscription model) அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது.
$24 பில்லியன் டாலர் வருவாய் கணக்கு:
ஒருவேளை Muse செயலி 100 மில்லியன் (10 கோடி) சந்தாதாரர்களைப் பெற்று, ஒவ்வொருவரும் சராசரியாக மாதம் $20 சந்தா செலுத்தினால், மெட்டா நிறுவனத்திற்கு ஆண்டிற்கு $24 பில்லியன் டாலர் (சுமார் ₹2 லட்சம் கோடி) கூடுதல் வருவாய் கிடைக்கும்!
இருப்பினும், இந்த பிரம்மாண்ட இலக்கை எட்டுவதில் மெட்டாவுக்கு பல நிஜ உலகச் சவால்கள் காத்திருக்கின்றன.
மெட்டாவின் Muse சந்திக்கும் 6 முக்கியச் சவால்கள்:
1. பயனர் வளர்ச்சியும் மெதுவான போக்கும்
தற்போது மில்லியன் கணக்கிலான பயனர் தளத்தைக் கொண்டு வேகமாக வளர்ந்து வந்தாலும், சந்தையில் எழுந்துள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அச்சங்கள் காரணமாக இதன் பயனர் வளர்ச்சி விகிதம் (Growth Rate) அடுத்தடுத்த கட்டங்களில் சற்றே சீரடையும் (மட்டுப் படும்) என வல்லுனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
2. மெட்டாவின் அதிகரித்து வரும் கடன் சுமை
மெட்டா தனது AI உள்கட்டமைப்பு மற்றும் Muse-ன் வளர்ச்சிக்கு செலவு செய்ய பெருமளவில் கடன்களையே (Debt) நம்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மெட்டாவின் புத்தகங்களில் கடன் அளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிய அளவிலான நிதியியல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
3. கணக்கீட்டுத் திறன் மற்றும் தரவு மையச் சவால்கள்
100 மில்லியன் பயனர்களின் தன்னாட்சி AI தேவைகளை ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மெட்டாவிடம் தற்போது போதிய கணக்கீட்டுத் திறன் (Compute Power) இல்லை.
சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் எதிர்ப்புகள்: புதிய Gigawatt-scale தரவு மையங்களை (Data Centers) உருவாக்குவது எளிதான காரியமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்சாரத் தேவை, நீர் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக உள்ளூர் அளவில் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகள் (Social and Political Headwinds) தீவிரமடைந்து வருகின்றன.
இதனால் புதிய தரவு மையங்களை உருவாக்கி 100 மில்லியன் பயனர் இலக்கை எட்டுவது மிக மெதுவான செயல்முறையாகவே இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
4. சட்டரீதியான சிக்கல்களும் நஷ்டஈடுகளும்
மெட்டா நிறுவனம் பதிப்புரிமை மீறல், பயனர் தனியுரிமை தொடர்பான வழக்குகள் எனப் பல சட்டப் போராட்டத்தில் (Legal Tangles) சிக்கியுள்ளது. பல்வேறு வழக்குகளில் பல பில்லியன் டாலர்களை அபராதமாகவும்/ஒப்பந்த தீர்வுகளாகவும் (Settlements/Damages) மெட்டா செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏற்கெனவே உள்ளது அல்லது பிற்காலத்தில் செலுத்த வேண்டி வரலாம்.
5. அலைகடல் போட்டிகள்: Blue Ocean To Red Ocean
தற்போது எவ்விதப் போட்டியுமின்றி மெட்டா மட்டுமே ஆட்சி செய்யும் சந்தையாக இது ஒரு Blue Ocean Strategy போன்று தோற்றமளித்தாலும், விரைவில் இது கடுமையான போட்டிகள் நிறைந்த Red Ocean Strategy ஆக மாறும். Hyperscalers எனப்படும் கூகிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற மாபெரும் கிளவுட் நிறுவனங்கள் தங்களின் சொந்த AI ஏஜென்ட்களை விரைவில் களமிறக்கும் என்றும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
6. கடவுச்சொற்கள் மற்றும் பயனர் நம்பிக்கை பற்றாக்குறை
கூகிள் அல்லது ஆப்பிள் நிறுவனங்களை விட மக்கள் மெட்டாவைத் தரவுப் பாதுகாப்பில் குறைவாகவே நம்புகிறார்கள்.
நம்பிக்கைக் கருத்துக்கணிப்பு: "உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் கடவுச்சொற்கள் மற்றும் ஈ-காமர்ஸ் இணையதளக் கடவுச்சொற்களை மெட்டாவிடம் ஒப்படைப்பீர்களா?" என்று மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலானோர் "இல்லை" என்றே பதிலளித்துள்ளனர்.
நமது மின்னஞ்சல் கணக்குகளுக்கான அணுகலும், நமக்காகப் பணம் செலவழிக்கும் அதிகாரமும் (Shopping Authorization) இல்லையென்றால், Muse போன்ற தனிப்பட்ட AI ஏஜென்ட்களின் பயன்பாடு மிகவும் வரம்பிற்குட்பட்டதாகவே அமைந்துவிடும். இது ஒரு கவலைக்குரிய விடயம்.
சுருக்கம்
Meta Muse First Mover Advantage நிலைக்குமா? முதல் நிறுவனமாகச் சந்தைக்குள் நுழைந்த பெருமை (First Mover Advantage) மெட்டாவிற்கு இருந்தாலும், உள்கட்டமைப்பு பற்றாக்குறை, சட்டச் சிக்கல்கள், அதிகரித்து வரும் கடன் மற்றும் பயனர் நம்பிக்கை தொடர்பான கேள்விகளைத் தாண்டி Muse-ஐ ஒரு வெற்றி ஏஜெண்டாக தக்கவைத்துக்கொள்வது மெட்டாவிற்கு மிகப்பெரிய சவாலாகும் என்றே யோசிக்கத் தோன்றுகிறது.







