AI ஏற்படுத்தும் பொருளாதார மாற்றங்களும் மனங்களை வெல்லும் மாயமும்!
செயற்கை நுண்ணறிவு (AI) மனித குலத்தை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது? "AI மனித உழைப்பை மிஞ்சி உற்பத்தி ஆதிக்கத்தைக் கைப்பற்றக்கூடும்" என்கிறார் எலான் மஸ்க்; "AI மனிதர்களின் விருப்பங்களை உணர்ந்து அவர்களின் எண்ணங்களை ஓரளவுக்குப் பாதிக்கும் திறனைப் பெறுகிறது" என்கிறார் யுவால் நோவா ஹராரி.
இந்த இரு பார்வைகளும் நம் முன் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
1. வேலை இழப்பும் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளியும்: AI ஏற்றத்தாழ்வை அதிகரிக்குமா?
AI தொழில்நுட்பம் பரவலாகும்போது சில துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையலாம் என்றும், அதே நேரத்தில் AI-ஐப் பயன்படுத்தித் திறம்பட இயங்கும் நிறுவனங்களின் கை ஓங்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
எடுத்துக்காட்டு: முன்பு 50 மென்பொருள் பொறியாளர்கள் செய்த கோடிங் பணிகளில் சிலவற்றை, இன்று சில "AI Agent"களின் உதவியுடன் சிறிய குழுக்களே செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இதனால் ஏஐ செயல் திறனற்ற தொழிலாளர்களின் வருவாய் வாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது. அதே நேரம், பெரிய AI உள்கட்டமைப்பைக் கையாளும் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் நிதி மற்றும் பொருளாதார அதிகாரம் பெருமளவில் குவிய வாய்ப்புள்ளது. இந்தப் போக்கு சில நாடுகளில் பொருளாதார இடைவெளியை மேலும் அதிகரிக்கக்கூடும்.
2. தனிநபர் பட்சபாதமா (bias) அல்லது கூட்டு பட்சபாதமா: எது அதிக ஆபத்தானது?
இன்றைய AI மாதிரிகள் அனைத்தும் மனிதர்கள் உருவாக்கிய தரவுகளிலிருந்தே (Human Documentation & Text) கற்றுக்கொள்கின்றன. அந்த தரவுகளில் மனிதர்களின் பட்சபாதம் பெருமளவில் உள்ளடங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த தரவுகளை வைத்து பயிற்றுவிக்கப் படும் ஏஐ மாடலுடைய கூட்டு பட்சபாதம் அனைத்து தனி நபர் பட்சபாதங்களையும் உள்ளடக்கியது.
எடுத்துக்காட்டு: வங்கி கடன் வழங்கும் AI அமைப்பில், கடந்த கால மனிதர்களின் தரவுகள் உள்ளீடு செய்யப்படும்போது, அதில் மறைந்திருந்த இன அல்லது பாலின பாகுபாடுகள் AI-ன் முடிவுகளிலும் வெளிப்பட வாய்ப்புள்ளது.
ஒரு தனி மனிதனின் பட்சபாதம் (Bias) குறிப்பிட்ட சிலரை மட்டுமே பாதிக்கும். ஆனால், மனித குலத்தின் பொதுவான கூட்டு பட்சபாதங்களை ஏற்றுக்கொண்ட ஒரு AI இயங்குதளம், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களின் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்பதால், இது தனிநபர் பட்சபாதத்தை விடப் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
3. மனித வாழ்க்கையைப் பாதிக்கும் தொழில்நுட்பத்தை மனித சமூகம் நிராகரிக்குமா?
ஒருவேளை AI தொழில் வாய்ப்புகளைக் குறைத்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைப் பெருக்கினால், மனித சமூகம் அதை ஏற்க மறுக்குமா?
வரலாற்றுச் சான்று: தொழில்புரட்சியின் போது எந்திரங்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கருதி "லூடைட்ஸ்" (Luddites) போன்ற அமைப்புகள் எந்திரங்களை எதிர்த்துப் போராடின.
AI தொழில்நுட்பமும் மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் சமூகச் சமநிலையையும் கணிசமாகப் பாதிக்கும் சூழல் வந்தால், மனித சமூகம் கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட விதிமுறைகள் அல்லது பயன்பாட்டுப் புறக்கணிப்பு மூலமாக அதன் கட்டுப்பாடற்ற ஆதிக்கத்தைச் சீரமைக்க நிச்சயம் முயலும்.
சுருக்கம்
AI என்பது நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கருவி. அது சமுதாயத்தைப் பிரிக்கும் காரணியாக மாறாமல், அனைவருக்கும் பயனளிக்கும் தொழில்நுட்பமாக மாறுவது அதை நாம் (அரசாங்கம், சமூகம், தனிநபர்) எவ்வாறு கட்டுப்படுத்துகிறோம் மற்றும் ஒழுங்குபடுத்துகிறோம் அல்லது உபயோகிக்கிறோம் என்பதில்தான் உள்ளது. அதே நேரம் அந்தக் கருவியை நம் உயர்வுக்கு பொறுப்பாக உபயோகப் படுத்திக்கொள்ள தேவையான திறமைகளையும் வளர்த்துக் கொள்வது முக்கியம்.
இதைத்தான் திருவள்ளுவர் பின்வரும் குறளில் சொல்கிறார்:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
இதில் தூங்காமை என்பதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக